ஆகுபெயர்களையும் அதன் தன்மை மற்றும் வகைகளையும் அறிந்து கொள்ளல்-01
ஆகுபெயர் சார்ந்து கொடுக்கப்படும் கேள்விகளுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-01
1.ஆகுபெயர் என்றால் என்ன?
ஒரு பொருளின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
2.ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
ஆகுபெயர் பதின்மூன்று வகைப்படும். அவையாவன:
1) பொருளாகு பெயர்
2) இடவாகு பெயர்
3) காலவாகு பெயர்
4) சினையாகு பெயர்
5) குணவாகு பெயர்
6) தொழிலாகு பெயர்
7) அளவையாகு பெயர்
8) சொல்லாகு பெயர்
9) தானியாகு பெயர்
10) கருவியாகு பெயர்
11) காரியவாகு பெயர்
12) கருத்தாவாகு பெயர்
13) உவமையாகு பெயர்
3. பொருளாகு பெயர் என்றால் என்ன?
முதற்பொருள் ஒன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொருபொருளுக்கு ஆகிவருதல் பொருளாகு பெயர் எனப்படும்.
உ+ம்: தாமரை போலும் முகம்.
4.இடவாகு பெயர் என்றால் என்ன?
ஓர் இடத்தின் பெயர் அவ்விடத்தோடு தொடர்புடைய பிறிதொருபொருளுக்கு ஆகிவருதல் இடவாகுபெயர் எனப்படும்.
உ+ம்: காஞ்சிபுரம் உடுத்தினாள்.
5.காலவாகு பெயர் என்றால் என்ன?
காலத்தின் பெயர் ஒன்று அக்காலத்தில் நிகழும் பிறிதொரு நிகழ்வுக்காகி வருதல் காலவாகு பெயர் எனப்படும்.
உ+ம்: கார்த்திகை பூத்தது.
6.சினையாகு பெயர் என்றால் என்ன?
சினைக்குரிய பெயர் ஒன்று அதனோடு தொடர்புடைய பிறிதொருபொருளுக்கு ஆகிவருதல் சினையாகுபெயர் எனப்படும்.
உ+ம்: தோகை ஆடியது.
7. குணவாகு பெயர் என்றால் என்ன?
குணப்பெயரொன்று அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் குணவாகுபெயர் எனப்படும்.
உ+ம்: வெள்ளை உடுத்தான்.
8.தொழிலாகு பெயர் என்றால் என்ன?
தொழிற் பெயரொன்று அத்தொழிலோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகி வருதல் தொழிலாகுபெயர் எனப்படும்.
உ+ம்: பொரியலோடு உண்டான்.
9.அளவையாகு பெயர் என்றால் என்ன?
அளவைப் பெயரொன்று அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் அளவையாகு பெயர் எனப்படும்.
உ+ம்: உடுப்பது நான்கு முழம்.
10. சொல்லாகு பெயர் என்றால் என்ன?
சொல்லொன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் சொல்லாகு பெயர் எனப்படும்.
உ+ம்: உரை எழுதினான்.