ஆகுபெயர்களையும் அதன் தன்மை மற்றும் வகைகளையும் அறிந்து கொள்ளல்-02
ஆகுபெயர் சார்ந்து கொடுக்கப்படும் கேள்விகளுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-02

1.தானியாகு பெயர் என்றால் என்ன?
தானியொன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் தானியாகு பெயர் எனப்படும்.
உ+ம்: அடுப்பிலிருந்து பாலை இறக்கு
2. கருவியாகு பெயர் என்றால் என்ன?
கருவிப் பெயரொன்று அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் கருவியாகு பெயர் எனப்படும்.
உ+ம்: திருவாசகம் ஓதினான்.
3. காரியவாகு பெயர் என்றால் என்ன?
காரியப் பெயரொன்று அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் காரியவாகு பெயர் எனப்படும்.
உ+ம்: இந்நூல் அலங்காரம்.
4. கருத்தாவாகு பெயர் என்றால் என்ன?
கருத்தா ஒருவரின் பெயர் அவரோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகிவருதல் கருத்தாவாகு பெயர் எனப்படும்.
உ+ம்: இவருக்கு வள்ளுவர் மனப்பாடம்.
5. உவமையாகு பெயர் என்றால் என்ன?
உவமானப் பெயரொன்று அதனோடு தொடர்புடைய உவமேயத்திற்காகி வருதல் உவமையாகு பெயர் எனப்படும்.
உ+ம்: பாவை வந்தாள்.
6.அளவையாகு பெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
நான்கு வகைப்படும். அவையாவன:
1) எண்ணலளவை ஆகுபெயர்
2) எடுத்தலளவை ஆகுபெயர்
3) முகத்தலளவை ஆகுபெயர்
4) நீட்டலளவை ஆகுபெயர்
7.எண்ணலளவை ஆகுபெயர் என்றால் என்ன?
எண்ணுப் பொருள் ஒன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.
உ+ம்: ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
8.எடுத்தலளவை ஆகுபெயர் என்றால் என்ன?
எடுத்தலளவைப் பொருளொன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.
உ+ம் : இரண்டு கிலோ வாங்கினேன்.
இரண்டு வீசை தந்தான்.
9.முகத்தலளவை ஆகுபெயர் என்றால் என்ன?
முகத்தலளவைப் பொருளொன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் முகத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.
உ+ம்: ஒரு லீற்றர் கொடுத்தேன்.
நாழியுடைந்தது.
10.நீட்டலளவை ஆகுபெயர் என்றால் என்ன?
நீட்டலளவைப் பொருளொன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்காகி வருதல் நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.
உ+ம்: உடுப்பது நான்கு முழம்.
கீழைத்தடி வளைந்தது.