ஆகுபெயர்களையும் அதன் தன்மை மற்றும் வகைகளையும் அறிந்து கொள்ளல்-03

ஆகுபெயர் சார்ந்து கொடுக்கப்படும் கேள்விகளுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-03

1.இப்பதின்மூன்று வகையும் தவிர்ந்த வேறு ஆகுபெயர்களும் உள்ளனவோ? உள்ளனவாயின் அவை எவை? 

ஆம் உள்ளன. அவையாவன

விட்டவாகுபெயர் 

விடாதவாகுபெயர் 

இருமடியாகுபெயர் 

மும்மடியாகுபெயர் 

நான்மடியாகுபெயர் 

அடையடுத்தவாகுபெயர் 

இருபெயரொட்டாகுபெயர்

 

2.  விட்டவாகுபெயர் என்பதை விளக்குக.

உ+ம்:

அவ்வூர் வந்தது - இங்கே ஊரென்பது தன் பொருளாகிய இடத்தை விட்டு, தன்னிடத்திலுள்ள மனிதரை உணர்த்தி வருவதால் இது விட்டவாகுபெயர் எனப் பெயர் பெற்றது.

 

3.விடாதவாகுபெயர் என்பதை விளக்குக. 

உ+ம்:

புளிதின்றான் - இங்கே புளி என்பது தன் சுவையாகிய பொருளை விடாது நின்று, தன் பொருளின் வேறல்லாத காய், கனி எனும் பொருள்களை உணர்த்துவதால் இது விடாதவாகு பெயர் எனப் பெயர் பெற்றது.

 

4.இருமடியாகுபெயர் என்பதை விளக்குக. 

உ+ம்:

கார் வந்து - இங்கே கார் எனும் நிறப் பெயர் முதலில் கருமையான மேகத்தைக் குறித்து வந்து, பின் அம்மேகம் பெய்யும் மழையைக் குறித்து வந்துள்ளமையால் இது இருமடியாகு பெயர் எனப் பெயர் பெற்றது.

 

5.மும்மடியாகுபெயர் என்பதை விளக்குக. 

உ+ம்:

கார் விளைந்தது - இங்கே கார் எனும் நிறப்பெயர் முதலில் கருமையாகிய மேகத்திற்காகிப், பின் அம்மேகத்தால் பொழியப்படும் மழைக்காகிப் பின், அம்மழைக்காலத்தில் விளையும் பயிருக்காகி என ஒரு பொருளின் மூன்று தொடர்புகளைப் புலப்படுத்துவதால் இது மும்மடியாகு பெயர் எனப்பெயர் பெற்றது.


6.நான்மடியாகுபெயர் என்பதை விளக்குக. 

உ+ம்:

கார் அறுத்தது - இங்கே கார் எனும் நிறப் பெயர் முதலில் கருமையாகிய மேகத்திற்காகப் முன், அம்மேகத்தால் மொழியப்படும் மழைக்காகிப் பின், அம்மழைக்காலத்தில் விளையும் பயிருக்காகி இறுதியில் அப்பயிரின் அறுவடைக்காகி ஒரு பொருளின் நான்கு தொடர்புகளைப் புலப்படுத்துவதால் இது நான்மடியாகுபெயர் எனப் பெயர் பெற்றது.

 

7.அடையடுத்தவாகுபெயர் என்பதை விளக்குக. 

உ+ம்: 

வெற்றிலை நட்டான் - இங்கே இலை எனும் சினைப் பெயரின் முன்னே வெறுமை எனும் அடை அடுத்து வந்து முதற் பொருளுக்காவதால் இது அடையடுத்தவாகு பெயர் எனப் பெயர் பெற்றது.


8.இருபெயரொட்டாகுபெயர் என்பதை விளக்குக.

வகரக்கிளவி - இங்கே கிளவி என்பது சொல்லை உணர்த்தும் போது இயற்பெயராயும், சொல்லுக்குக் கருவியாகிய எழுத்தை உணர்த்தும் போது ஆகுபெயராயும் வருகிறது, வகரக்கிளவி என்பது வகரமாகிய எழுத்து எனப் பொருள்படும். இவ்வாறு ஒருபொருளுக்கு இரு பெயர் ஒட்டி நிற்கும் போது அவற்றுள் ஒரு பெயர் ஆகுபெயராக நிற்பதால் அது இருபெயரொட்டாகுபெயர் எனப் பெயர் பெற்றது.

 

மேலும் பாடங்கள்