திணை, பால், எண், இடங்களை அறிதல்.
கேள்விக்கான விடைகளைச் சரியாக விளக்கி அறிதல்.
1. திணை என்பது எதனைக் குறிக்கிறது?
சாதியைக் குறிக்கிறது.
2. இரு திணைகளும் எவை?
1) உயர்திணை
2) அஃறிணை
3. உயர்திணை என்பது யாது?
மக்கள், தேவர், நரகர் முதலானோரைக் குறிக்கும் திணை உயர்திணை ஆகும். உ+ம்: கண்ணன், உதயா, முருகன், அசுரன்.
4. அஃறிணை என்பது யாது?
மக்கள், தேவர், நரகர் தவிர்ந்த உயர்வல்லாத ஏனைய உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தையும் குறிக்கும் திணை அஃறிணை எனப்படும்.
உ+ம்: மரம், காகம், புத்தகம், யானை.
5. ஐம்பால்களும் எவை?
1) ஆண்பால்
2) பெண்பால்
3) பலர்பால்
4) ஒன்றன் பால்
5) பலவின் பால்
6. உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை? அவை எவை?
மூன்று.
அவையாவன:
1) ஆண்பால்
2) பெண்பால்
3) பலர்பால்
7.அஃறிணைக்குரிய பால்கள் எத்தனை? அவை எவை?
இரண்டு.
அவையாவன:
1) ஒன்றன் பால்
2) பலவின் பால்
8. பால் காட்டும் விகுதிகள் எவை?
1) ஆண்பால் விகுதிகள் - அன், ஆன்
2) பெண்பால் விகுதிகள் - அள், ஆள்
3) பலர்பால் விகுதிகள் - அர், ஆர், ப, மார்
4) ஒன்றன்பால் விகுதிகள் - து, டு, று
5) பலவின்பால் விகுதிகள் - அ, ஆ
9. பால் காட்டும் விகுதிகளுக்கு உதாரணம் தருக.
1) ஆண்பால் விகுதிகள்
அன் உ+ம்: நடந்தனன்
ஆன் உ+ம்: படித்தான்
2) பெண்பால் விகுதிகள்
அள் உ+ம்: படித்தனள்
ஆள் உ+ம்: படித்தாள்
3) பலர்பால் விகுதிகள்
அர் உ+ம்: நடந்தனர்
ஆர் உ+ம்: நடந்தார்
ப உ+ம்: மொழிப
மார் உ+ம்: கொண்மார் (கொள்பவர் எனும் பொருள்படும்.)
4) ஒன்றன்பால் விகுதிகள்
து உ+ம்: நடந்தது
டு உ+ம்: இது குறிப்புவினை முற்றிலே மாத்திரம் வரும்.
று உ+ம்: இது இறந்தகால இடைநிலையோடு மாத்திரம் வரும்.
5) பலவின் பால் விகுதிகள்
அ உ+ம்: பறவைகள் பறந்தன.
ஆ உ+ம்: நடவா (இது எதிர் மறையிலேயே வரும்.)
10. மூவிடங்களும் எவை?
1) தன்மை
2) முன்னிலை
3) படர்க்கை