ஒரு பாட்டுடையான்
தரம் 8 பாடம் 4:1.1

ஒரு பாட்டுடையான்
கம்பனுடைய பெருங்காப்பியத்தில் அளவால் பெருமை பெற்றவர்களும், இயல்பால் பெருமை பெற்றவர்களும் பலர் உளர். இராமனையேத் தலைவனாகக் கொண்டு காப்பியம் தோன்றினாலும், இராமனை விட அதிக பாடல்களைப் பெற்று விளங்குகின்றான் அரக்கர் கோமான். எனவே, அதிகமான பாடல்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தால் ஒரு பாத்திரத்தை அதிக சிறப்புடையது என்று கூறுவதற்கும் இல்லை. இன்னும் சில பாத்திரங்கள் அதிகமான பாடல்களைப் பெறவில்லையானாலும் கம்ப நாடனுடைய முழுப் பரிவிற்கும் பாத்திரமாகி நிற்கின்றனர். அனுமன் , பரதன் போன்றவர்கள் இலக்கிய உலகிலேயே தலை சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்க வேண்டுமென்ற நோக்கத்துடனேயே படைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
அதிகமான பாடல்களைப் பெற்றுள்ளவன் அரக்கன் கோமான் என்றால், இதற்கு நேர் முரணாக ஒரேயொரு பாடலைப் பெற்று விளங்குகிறான் தசரதனுடைய கடைசி மைந்தன். பல சமயங்களில் தான் பெற்ற பிள்ளைகள் நால்வர் என்ற எண்ணமும், தனக்கு சத்துருக்கன் என்ற நாலாவது பிள்ளை ஒருவன் உண்டென்ற எண்ணமும், தசரதனுக்கு இருந்ததாகவே அறிய முடியவில்லை. அவன் காதல் மைந்தனாகிய இராமன் தான் வாழ்நாள் முழுவதிலும் அயோத்தி வேந்தன் மன அரங்கில் விளையாடுகின்றான். இறுதிக் காலத்தில் தசரதன் மனம் முழுவதிலும் பரதன் நிரம்பி இருக்கிறான். ஆனால், இந்த இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இராமன் நிறைந்திருக்கும் பொழுது தசரதன் மனம் ஆனந்தக் கடலில் துளையமாடுகின்றது. பரதன் நினைவு வந்தவுடனேயே எல்லையற்ற வெறுப்புக் கொண்டு, தன்னையும் வருத்திக் கொண்டு பிறரையும் வருத்துகிறான் கைகேயியின் கணவன். இரண்டு புதல்வர்கள் இப்படியிருக்க, மூன்றாவது புதல்வனாகிய இலக்குவன் இராமனுடைய நிழலாகவே கடைசி வரை இருந்து கற்போர் மனத்தில் நீங்கா இடம் பெற்று விடுகிறான். இராமனுடன் செல்லும் அவன், ‘தம்பி யென்னும் படிக்கும் அல்லாமல் அடியரின் ஏவல்’ செய்கின்றான். அடியனைப் போல ஏவல் செய்பவனேயாயினும், பல சமயங்களில் அவனுடைய கோபம் கட்டுக்கடங்காத நிலையில் செல்லவே நம்மை வியப்பிலாழ்த்தி விடுகின்றான். இராமனே கூறுகின்ற படி, ‘உலகம் ஏழினோடு ஏழையும் கலக்குவன்’ என்று இலக்குவன் கருதுகிறான். எனவே, இந்த மைந்தனையும் மறத்தல் இயலாத காரியம். மூன்று மைந்தர்கள் நம்மிடையே உழன்று நம் கவனம் முழுவதையும் எடுத்துக் கொள்வதால் நான்காவது மைந்தனைப் பற்றி நாம் கவலை கொள்வது இல்லை. நாம் மட்டுமென்ன? பெற்ற தந்தையே கவலை கொள்வதாகவும் தெரியவில்லை. இந்த இரண்டையும் கருதிப் போலும் கம்பநாடனும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே, பத்தாயிரம் பாடல் பாடிய அவனும் நான்காவது தம்பிக்கு ஒரு பாடலே தந்துள்ளான். ஒருவேளை பத்தாயிரத்துள் ஒருவனாக நான்காவது தம்பியைக் கருத வேண்டுமென்று கவிஞன் எண்ணினான் போலும்.
காப்பியமே முடிகின்ற தருணத்தில், மீட்சிப் படலத்தில் நான்காவது தம்பியின் உண்மை உள்ளத்தைக் காண்கின்றோம். இராமன் சொன்ன நாட்கள் முடிந்து விட்டன. கணிதப் புலவர்கள் கூட ‘ஆண் தகைக்கு இன்று அவதி’ அதாவது ‘இன்றே அவன் வர வேண்டிய நாள்’ என்று கூறிவிட்டார்கள். இந்நிலையில் வாய்மை காக்கின்ற பரதன், ‘நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன்; மனத்து மாசு என் உயிரொடு வாங்குவேன்’ என்ற முடிவுக்கு வந்து, நாலாவது தம்பியை அழைத்து வருமாறு ஏவுகின்றான்.
கண்ணீர் ஆறாகப் பெருக பரதன் நிற்கின்ற கோலத்தில், பக்கத்தில் சென்று, தொழுது நிற்கின்றான் மூவருக்கும் பின் உள்ளவனாகிய நாலாமவன். உடனே தன்னுடைய மார்போடு சேர்த்து இறுகத் தழுவிக் கொண்டான் பரதன். எதற்காகத் தன்னை அழைத்தான் அண்ணன் என்பதை அறியாமல் தவித்துக் கொண்டு நிற்கின்ற தம்பியிடம் அறத்தின் ஆணி வேராகிய பரதன் பேசத் தொடங்குகிறான். “ஐய, வேண்டுவது உண்டு, அவ்வரம் தரற்பாற்று” என்கின்றான். அதாவது உன்னிடம் ஒரு வரம் வேண்டி இருக்கிறேன்; அதனைத் தந்தே ஆக வேண்டும் என்று கூறி அது என்ன வரம் என்று தம்பி கேட்கும் முன்னரே தானே சொல்லத் தொடங்குகிறான். அவ்வரம் எது என்று கேட்பாயேயானால், “சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்; மின்னு தீயிடையான் இனி வீழுவன்; மன்னன் ஆதி; என் சொல்லை மறாதி” என்றானாம். அதாவது, “இராகவன் சொன்ன நாளில் வரவில்லையாதலால், யான் நெருப்பில் வீழ்ந்து உயிரை விடப் போகிறேன். ஆனால் மன்னன் இல்லாமல் நாடு இருக்கக் கூடாது; ஆதலால் நீ மன்னனாக ஆவாயாக” என்று கூறி முடித்தான் பரதன். ஆனால் தசரதன் புத்திரர்கள் யாருமே ஒருவர் கூறினார் என்பதற்காகத் தம் கடமையை விட்டுக் கொடுப்பதில்லை. இதை நன்றாக அறிந்த பரதன், இதோடு நிறுத்தி விட்டால் சத்துருக்கன் ஒரு நாளும் இதற்கு உட்பட மாட்டான் என்பதை உணர்ந்து, ஓர் அறக்கட்டளை இடுகின்றான். தான் மன்னன் என்ற முறையிலும் அண்ணன் என்ற முறையிலும் சொல்லுகின்றவற்றை இளையவனும், குடிமக்களுள் ஒருவனுமாகிய சத்துருக்கன் தட்டக்கூடாது என்பதை நினைவுறுத்துவது போல “என் சொல்லை மறுக்கக் கூடா” தென ஆணையிடுகின்றான். என்றாலும் என்ன? இதைக் கேட்டான் நான்காவது தம்பி. காதுகளைப் பொத்திக் கொண்டான். விசத்தை உண்டவனைப் போலக் கண்ணும் மனமும் நடுங்கியன. விம்மி அழுதான். ஆனால் ,இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒருசில வினாடி நேரம் தான் நின்றதாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் வென்று, கோபமாகிய ஓர் உணர்ச்சி எல்லை மீறிக் கிளம்புகின்றது. அதனைக் கூறவந்த கவிஞன், ‘கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்துடன்’ என்று கூறிகிறான்.
எனவே, தன்னை மீறி வருகின்ற சினத்தால் ஆட்கொள்ளப்பட்ட இளையவன் அண்ணனை நோக்கி, “அழுந்து துன்பத்தினாய்! நான் உனக்கு என் பிழை உளேன்?” என்று கேட்கிறான். இந்தக் கோப உணர்ச்சி ஓரளவு அதிக நேரம் இருந்து அதனோடு வெறுப்பு, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் ஆகிய எட்டுச் சுவைகளும் ஒன்றாகக் கலந்து ஒருங்கே காட்சியளிக்கின்ற ஒரே பாட்டில் பேசுகின்றான் அந்த அற்புதமான தம்பி.
‘கான்ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போனானை காத்து, பின்பு
போனானும் ஒருத ம்பி; போனவன் தான் வரும்அவதி போயிற்று என்னா,
ஆனாத உயிர்விட என்று அமைவானும்
ஒருதம்பி; அயலே நாணாது,
யானாம்இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ்
அரசாட்சி! இனிதே அம்மா!’
“காட்டை ஆள்வதற்காக – அரச பாரத்தைக் கைவிட்டுச் சென்றவனாகிய இராமனைக் காப்பாற்றுவதற்காக – ஒரு தம்பி பின்னேயே போய் விட்டான். அப்படிப் போனவன் வரவேண்டிய நாள் கடந்து விட்டது என்று சொல்லிக் கொண்டு மிகச் சிறந்த உயிரைவிட முடிவு செய்து விட்டான் மற்றொரு தம்பி. இவர்கள் இருவரும் ஒரு புறம் நிற்க, ஒரு சிறிதும் வெட்கம் இல்லாது நான் இந்த அரசாட்சியை ஆள வேண்டுமா? எவ்வளவு இனிய அரசாட்சி இது!” என்பதே இப்பாடலின் பொருள்.
நாலாவது தம்பியின் மனநிலை முழுவதையும் இந்த ஒரு பாடல் காட்டி நிற்கின்றது. பரதன் கூறிய இந்தச் செய்தியை நினைக்கவும் முடியாமல் அஞ்சுகிறான் சத்துருக்கன். அந்த ‘அச்சத்தின்’ பின்னே இத்தகைய ஒரு பைத்தியக்காரத்தனம் நடைபெறுமா? என்று நினைத்தவுடன் ‘மருட்கை’ தோன்றுகிறது. இந்த அரசாட்சியின் நிலையை நினைக்கும் பொழுது ‘எள்ளல்’ தோன்றுகிறது. தன் மனநிலை தெரியாமல் பேசிய பரதன் உரைகளைக் கேட்டுக் ‘கோபம்’ ஒரு புறமும், இவ்வளவு தவறாகத் தன்னை நினைந்து விட்டானே என்று நினைக்கும் பொழுது ‘அழுகையும்’, தான் இராமன் தம்பி அல்லையோ என்று நினைக்கும் பொழுது ‘இளிவரலும்’ ஒருங்கே தோன்றுகின்றன. ‘பல சொல்லக் காமுறுவர் மன்ற, மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர்’ என்றும், ‘சொல்லுக சொல்லில் பயனுடைய’ என்றும், ‘பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் திறன் இன்மை அறிந்து சொல்க’ என்றும் எழுந்த பொதுமறைக்கோர் எடுத்துக் காட்டாய், ‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணியாய்’ விளங்குகிறான் ஒரு பாட்டு உடையவனாகிய சத்துருக்கன். எனவே, ஏனைய பாத்திரங்களின் பல்வேறு உணர்ச்சி நிலைகளைப் பற்பல சந்தர்ப்பங்களில் பற்பல பாடல்கள் மூலம் கவிஞன் நமக்கு அறிவிக்கின்றான் எனினும், நாலாவது தம்பியைப் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளுமாறு நாலே வரிகளில் கூறியுள்ளான் கம்பநாடன். சிறந்த கலைஞன் மிகச் சிறிய அளவிலும் கூட மிகப் பெரிய படைப்பைப் படைத்துக் காட்டக்கூடும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு அன்றோ!
- அ. ச. ஞானசம்பந்தன்-
‘கம்பன் கலை’