பெயர்ச்சொற்கள்
தரம் 8 பாடம் 4:2.1
பெயர்ச் சொற்கள்
மரம், பறவை, நாற்காலி ஆகிய சொற்களைக் கவனிப்போம். இந்தப் பெயர்ச்சொற்கள் அப்பெயர் பெறுவதற்குக் காரணமிருக்கிறதா?
மரம் அவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம் எதுவுமில்லை.
பறவை பறக்கும் காரணத்தினாலேயே அப்பெயர் பெற்றது.
நாற்காலி நான்கு கால்களை உடையதால் அப்பெயர் பெற்றாலும் நான்கு கால்களையுடைய எல்லாப் பொருள்களும் நாற்காலி என அழைக்கப்படுவதில்லை. நான்கு கால்களை உடையவற்றுள் கதிரை மட்டும் நாற்காலி என அழைக்கப்படுவதற்கு விசேட காரணம் எதுவுமில்லை.
இவ்வாறு பெயர்ச் சொற்கள் பெயரிடப்பட்ட அடிப்படையில் இடுகுறிப் பெயர், காரணப் பெயர், காரண இடுகுறிப் பெயர் என பாகு படுத்தப்படுகின்றன.
இடுகுறிப்பெயர்
மரம், மலை, நிலம் முதலான பெயர்ச் சொற்கள் பண்டைய காலம் முதல் இன்று வரை ஒரு காரணமும் கருதாது பொருளை உணர்த்தி நிற்கின்றன. ஆதலால் இவ்வகையான பெயர்களை இடுகுறிப்பெயர் என்போம்.
காரணப் பெயர்
பறவை, வளையம், அணி, கணக்காளன் முதலான சொற்கள், காரணம் கருதி வழங்கப்பட்டு வரும் பெயர்கள் ஆகும். ஆகையால் இவ்வகையான பெயர்களைக் காரணப் பெயர் என்போம்.
காரண இடுகுறிப்பெயர்
நாற்காலி, வளையல், முள்ளி முதலான சொற்கள், காரணம் கருதிய கூட்டத்துள் காரணம் ஏதுமின்றி குறித்ததொரு வகையை மட்டும் சுட்டி வருகின்றன. இத்தகைய பெயர்களைக் காரண இடுகுறிப்பெயர் என்போம்.