கட்டுரையின் அமைப்பு
தரம் 8 பாடம் 4:3.4
கட்டுரையின் அமைப்பு
கட்டுரையானது பிரதானமாகப் பின்வரும் மூன்று பகுதிகளைக் கொண்டதாகும். எனினும் எல்லாவகைக் கட்டுரைகளிலும் மேற்படி பகுதிகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
( உதாரணமாக வர்ணனைக் கட்டுரைகளில் முகவுரை, முடிவுரை என்பன அவசியமில்லை)
1. முகவுரை – அறிமுகம், கட்டுரைத் தலைப்பின் விளக்கம், நோக்கம் முதலியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். வாசிப்போரை ஈர்த்து கட்டுரையை வாசிக்கத் தூண்டுவதாக முகவுரை அமைவது சிறப்பானதாகும்.
2. தொடருரை – கட்டுரையின் உள்ளடக்கப் பகுதி இதுவாகும். பொருத்தமான விடயங்களைப் பந்திகளில் இது கொண்டிருக்கும்.
3. முடிவுரை – கட்டுரை விளக்கிய விடயத்தின் தொகுப்பாக அல்லது சாரமாக முடிவுரை அமைந்திருக்கும். வலியுறுத்த வேண்டிய விடயங்களை வலியுறுத்தும் பகுதியாகவும், கட்டுரையாசிரியர் தனது கருத்துக்களை முன்வைக்கும் பகுதியாகவும் முடிவுரை அமையும்.
கவனிக்க வேண்டியவை
கட்டுரையானது பந்திகளால் ஆனதாகும். பந்தியொன்று ஒரு விடயத்தினை விளக்குவதாக இருக்கும். ஒரு பந்தியில் கூறிய விடயத்தினை அடுத்த பந்தியிலும் விவரிக்கக் கூடாது. ஆனால் பந்திகள் ஒன்றிற்கொன்று தொடர்புடையதாய் அமைதல் வேண்டும்.
பந்தியில் ஒரு தலைமை வாக்கியம் அமைய வேண்டும். அதனை உதாரணங்கள், மேற்கோள்கள், பழமொழிகள் என்பவற்றின் மூலமாக விரித்து விளக்குதல் வேண்டும். பந்திகள், வரிகளின் தொடக்கத்தில் இல்லாமல் சற்று வலந்தள்ளித் தொடங்க வேண்டும். இரண்டு பந்திகளுக்கிடையில் வரியினை விட்டு எழுதுவது தவறாகும்.