முயற்சி திருவினையாக்கும்

தரம் 8 பாடம் 6:1.1

 

முயற்சி திருவினையாக்கும்

ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்கொட்லாந்து தேசத்து மக்கள், தங்கள் நாட்டில் ஆங்கில அரசாட்சி தொடரக் கூடாது என்று முடிவு செய்தார்கள். தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே அந்த இரண்டு தேசங்களுக்கும் இடையே போர் மூண்டது.

ஆங்கிலேயர் சேனை ஸ்கொட்லாந்து போர் வீரர்களை மீண்டும் மீண்டும் பல முறை முறியடித்தது. அதன் பிறகு இராபர்ட் புரூஸ் ஸ்கொட்லாந்துப் படைக்குத் தலைவராக வந்தார். அவர் ஆறு முறை ஆங்கிலேயர்களுக்கு விரோதமாகப் படை எடுத்து , ஆறு முறையும் தோல்வியடைந்தார். அதன் பேரில் அவருடைய படை உடைந்து சிதறிப் போயிற்று. அவரது உயிருக்கே ஆபத்து வந்து விட்டது. உயிர் தப்பிப் பிழைக்க அவர் மறைவாகத் திரிந்தார்.

சில சமயங்களில் காடுகளில் மறைந்திருப்பார்; சில வேளைகளில் மலைப் புறங்களில் மறைந்திருப்பார்; இன்னும் சில நேரங்களில் ஏழைக் குடியானவர்களுடைய எளிய குடிசைகளில் மறைந்திருப்பார்; ஆங்கிலப் படை வீரர்கள் அவரைப் பிடிக்கப் பெரு முயற்சி செய்தார்கள். அவர் இடம் விட்டு இடம் பெயர்ந்து தப்பிப் பிழைத்தோட வேண்டியதாயிற்று.

சில நாட்கள் சென்ற பிறகு இப்படி ஓடிக்கொண்டே இருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று அவர் நினைத்தார். இனிமேல் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்ற முடிவிற்கு வந்தார். அன்றிரவு குடிசைக்குள்ளே வைக்கோல்  பரப்பி படுக்கையில் படுத்திருந்தார். அவருக்குத் தூக்கம் வரவில்லை. தம் தோல்வியைப் பற்றியேச் சிந்தித்துச் சிந்தித்து மனம் வருந்திக் கொண்டிருந்தார். நெஞ்சில் நின்ற தைரியமும் ஊக்கமும் குறைந்து கொண்டே வந்தன. “ இந்த நாட்டுக்கு விடுதலை கிடைக்குமா?” என்கிற ஐயப்பாடு அவர் உள்ளத்தில் எழுந்தது.

இரவு மெதுவாக கழிந்து, பொழுது விடிந்தது. ஒரு சிலந்திப் பூச்சி அவர் கண் பார்வையில் பட்டது. அது கூடு கட்டுவதற்காகக் கூரையில் ஓரிடத்திலிருந்து மற்றோர்  இடத்திற்குத் தாவிற்று. இரு விட்டங்களுக்கு இடையே வலையைப் பின்ன, ஒரு விட்டத்தை விட்டு மற்றொரு விட்டத்தைப் பிடிக்க முயன்றது. அப்படிப் பிடிக்க முடியாமல் தவறி விழுந்து, வாய் நூலில் தொங்கி, ஆடிக் கொண்டிருந்தது. பின்னர் முன்னிருந்த இடத்திற்கேத் திரும்பி வந்தது. மறுபடியும் முயன்றது. இப்பொழுதும் தவறிப் போயிற்று. மூன்றாம் முறையும் முயன்று பார்த்தது; பலனில்லை. எனினும் சிலந்திப்பூச்சி தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான்காம் முறையும் ஐந்தாம் முறையும் முயன்றது. காரியம் ஈடேறவில்லை. மறுபடியும் முயன்றது; மீண்டும் தோல்வியுற்றுக் கீழே விழுந்தது.

ஏழாவது முறையும் சிலந்தி முயன்றது; தன் முழுப் பலத்துடனும் வாய் நூலில் ஊசல் ஆடிற்று. இப்பொழுதும் அதற்குத் தோல்வி தான் கிடைக்குமா ? இல்லை; அதற்கு வெற்றி கிட்டி விட்டது!  அடுத்த விட்டத்தை அது எட்டிப் பிடித்துக் கொண்டு விட்டது.

புரூஸ் தம்மை நினைத்து வெட்கப்பட்டார். ஓர் அற்பமான சிலந்திப்பூச்சி விடாமுயற்சியைக் கைக்கொண்டு தன் காரியத்தை வெற்றியாக முடிக்குமாயின் நான் ஏன் இன்னும் முயன்று நம் காரியத்தில் வெற்றி காணக்கூடாது என்று எண்ணினார். மீண்டும்  ஒரு முறை முயலத்தான் வேண்டும்.  இந்த முயற்சி , சிலந்தியைப் போல , அவருக்கு ஏழாவது முயற்சி. சிலந்திப் பூச்சியை நினைத்துக் கொண்டே ஊக்கத்தோடும் உறுதியோடும் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். தம் நண்பர்களை ஒருங்கு கூட்டிச் சந்தித்தார்; அவர்களுடன் கலந்தாலோசித்தார். படைகளை ஒன்று திரட்டினார். தம் திட்டத்தைப் போர் வீரர்களுக்குத் தெரிவித்தார். அவர் தீட்டிய திட்டத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். போர் முழக்கத்துடன் அவர்கள் புறப்பட்டார்கள். இன்னும் எத்தனையோ படை வீரர்கள் அவரிடம் வந்து அவருடைய  சேனையில் சேர்ந்து கொண்டனர். ஒரு பெரும் போர் மூண்டது. இந்தத் தடவை ஆங்கிலப் படை  முழுத் தோல்வி கண்டு சிதறி ஓடிற்று. இராபர்ட் புரூஸ் போரில் வென்றார். ஸ்கொட்லாந்து விடுதலை பெற்றது. அதன் மக்கள் அனைவரும் வெற்றி விழாக் கொண்டாடினர். இராபர்ட் புரூஸ்  ஸ்கொட்லாந்துக்கு மன்னரானார்.