கதைகள் எப்படி உருவாகின?
தரம் 8 பாடம் 1:1.1

கதைகள் எப்படி உருவாகின?
கதை இல்லாத விடயங்களே உலகில் இல்லை. கதைத் தெரியாத மனிதர் என்று எவருமில்லை. கதை சொல்வது ஒரு கலை. அது மகிழ்ச்சியிலிருந்தும், பயத்திலிருந்தும் உருவாகிறது.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்து போய் அதையொரு கதையாக்கினார்கள். பல நூறு வருடங்கள் கடந்து விட்ட போதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல் வசீகரமாய் இருக்கின்றன. அவற்றில் ஒரு கதையினைப் படிபோம் வாருங்கள்.
பனைமரம் எப்படி உண்டானது?
ஒரு காலத்தில் அழகான இளம் பெண்கள் ஏழு பேர் இருந்தார்கள். அவர்கள் திறமையாக நடனமாடுவதில் கைதேர்ந்தவர்கள். ஒரு நாள் ஏழு பேரும் மலையின் மகனாக இருந்த செரியதோகா என்பவனுடன் சேர்ந்து நடனமாட விரும்பினார்கள். விருப்பத்துடன் செரியதோகாவும் அதற்கு ஒத்துக் கொண்டான். நடனம் ஆட ஆரம்பித்தார்கள். இரவு பகல் என்று நடனம்பல நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து ஏழு பெண்களும் சுழன்று ஒரு வார காலத்திற்கு நடனமாடினார்கள். ஆனால் அவர்களோடு ஆடிய மலையின் மகன் தனக்குப் பசித்த போது, ஆட்டத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு ஏழு பெண்களுக்கும் தெரியாமல் அவன் மட்டும் ரகசியமாகச் சென்று சாப்பிட்டு வந்து விட்டான். ஏழாம் நாள் நடனம் முடிந்ததும் ஏழு பெண்களும் நதியில் தங்களைச் சுத்தம் செய்து கொள்ளும் போது செரியதோகாவின் வாயிலிருந்து ஓர் உணவுத் துகள் வெளிப்பட்டது. இதைக் கண்ட அவர்கள் அவன் தங்களை ஏமாற்றி அவமதித்து விட்டதாகக் கோவப்பட்டு அவனைப் பிரிந்து போனார்கள்.
தன்னுடைய தவறுக்கு வருந்தி, பிரிந்து செல்லும் பெண்களைத் துரத்திக் கொண்டு சென்ற செரியதோகாவின் கைகளுக்கு அகப்படாமல் ஓடிய ஏழு கன்னியரின் அணிகலன்களும் பூமியில் விழுந்து ஈச்சை முதலான ஆறு வகை மரங்களானது. அந்தப் பெண்களின் தலையில் இருந்து உதித்த கேசம் தான் தரையில் பனை மரமென முளைத்தது. அதனால் தான் பனை தன் ஓலைகளை அசைத்து எப்போதும் ஆடியபடியே உள்ளது.