தமிழ் மொழி வாழ்த்து
தரம் 8 பாடம் 1:2.1
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ் மொழி! எங்கள் தமிழ் மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
- பாரதியார் -
சொல்லும் பொருளும்
வைப்பு – நிலப்பகுதி
சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்.
வண்மொழி – வளமிக்க மொழி.
இசை - புகழ்
தொல்லை – பழமை, துன்பம்
பாடலின் பொருள்
தமிழ் மொழி எக்காலத்தும் நிலை பெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்ட தமிழ் மொழி வாழ்க! எங்கள் தாய் மொழியாகியத் தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ் மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ் நாடு ஒளிர்க. தமிழ் மொழி வாழ்க! தமிழ் மொழி வாழ்க! என்றென்றும் தமிழ் மொழி வாழ்க! வானம் உள்ளவரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பெரும்பான்மைகளையும் அறிந்து மேன் மேலும் வளரும் தமிழ் மொழி வாழ்க!