நாட்டுப்புறக் கதைகள்

தரம் 8 பாடம் 2:1.1

 

நாட்டுப்புறக் கதைகள் 

 

வியாபாரியின் கோபம்

வியாபாரி ஒருவர் பலசரக்குக் கடை ஒன்று நடத்தி வந்தார். அதில் லாபம் சம்பாதித்து, லட்சக்கணக்கான பணமும் சேர்த்து விட்டார். அவருடைய சொத்தில், நூற்றில் ஒரு மடங்கு தான் வியாபாரத்தில் லாபம்  மூலம் சம்பாதித்தது; தொண்ணூற்றொன்பது பங்கு சிக்கனத்தின் மூலம் சேர்த்தது.

அந்த வியாபாரி மத்தியானச் சாப்பாட்டுக்காக, பலசரக்குக் கடையிலிருந்து வீட்டுக்கு வந்தார்; அவருடைய மகனும் அவருக்குப் பின்னாடியே வந்து விட்டான். இருவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர்.  மகன் தன் சுயபுராணத்தை விரிக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். வியாபாரி திண்ணையில் வந்து உட்கார்ந்ததும் மகன் ஆரம்பித்தான்.

“அப்பா இன்று காலையில் நான்,  நம் கடையில் மிளகு மூட்டையை அவிழ்க்க வேண்டியிருந்தது. அப்போது மூட்டைக்குள் கையை விட்டுத் துழாவி மிளகை எடுத்து, வந்தவர்களுக்கு விற்றேன்.  பிறகு மிளகு மூட்டைக்குள் விட்ட கையைத் தரையில் கழுவி விட்டால் நஷ்டம் என்று,  ஒரு பாத்திரத்தில் ஐந்து விரல்களையும்,  உள்ளங்கையையும் நன்றாகக் கழுவினேன். அப்படிக் கழுவியத்  தண்ணீரைக்  கொண்டு வந்து  ரசம் வைப்பதற்காக வீட்டில் கொடுத்தேன். நாம் இப்போது சாதத்துக்கு விட்டுச் சாப்பிட்ட மிளகு ரசம், அந்தத் தண்ணீரைக் கொண்டு தயார் செய்தது தான். இப்படிச்  சிக்கனமாக இல்லா விட்டால் பிழைக்க முடியுமா, அப்பா ?”

மகன் சரியாகப் பேசி முடிக்கும் முன்பே, வியாபாரித் துள்ளி எழுந்தார். மகன் எதிர்பார்த்தது போல் அவர் மகனுடைய முதுகைத் தட்டிக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக  அவருக்கு மகன் மீது மட்டுக்கு மிஞ்சிய கோபம் பிறந்து விட்டது. மேல் மூச்சு  கீழ் மூச்சு வாங்க, “ அடே, என் சொத்தை இப்படி நாசமாக்குவதற்காகவா உன்னைப் பெற்றெடுத்தேன் ? ஒரு முழுக் கையையும் கழுவிய தண்ணீரை இன்று ரசம்  வைத்துச் சாப்பிட்டு விட்டோமே!  இப்படிச் செலவு செய்தால் கட்டுமா ? இன்றைக்கு ஒரு விரலை மட்டும் கழுவி , அதைக் கொண்டு ரசம் வைக்கச் சொல்லியிருக்கக் கூடாதா ? ஐந்து விரல் தண்ணீரும் ஐந்து நாளைக்கு வருமே! இப்போது எல்லாம் வீணாகி விட்டதே! போ! என் முகத்தில் விழிக்காதே !’ என்று சீறி விழுந்தார் வியாபாரி.

 

இரண்டு தம்பிகள்

ஒரு ஊரில் ஒர் பெரியவர் இருந்தார். அவருக்கு மிகவும் வயதாகி விட்ட படியால், எந்த ஒரு  காரியத்தை முன்னிட்டும் அவர் வெளியூர்களுக்குப் போவதில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய இரண்டு குமாரர்களும் போய் வருவார்கள்.

மூத்தவன் கடந்த பத்து வருட காலமாகக் கல்யாணங்களுக்கு மட்டும் போய் வந்து கொண்டிருந்தான். அதனால் அவனுக்குக் கல்யாண வீட்டுத் தம்பி என்று பெயர்.

இளையவன் கடந்த பத்து வருட காலமாக இழவுகளுக்கு மட்டும் போய் வந்து கொண்டிருந்தான். அதனால் அவனுக்குக் இழவு  வீட்டுத் தம்பி என்று பெயர்.

மூத்தவன் இழவு வீட்டைப் பார்த்தது கூட இல்லை;  இளையவன் கல்யாண வீட்டைக் கனவில் கூடப் பார்த்ததில்லை.

ஒரு நாள் இரண்டு பேரும் வழக்கத்தை மாற்ற முற்பட்டார்கள். மூத்தவன் இழவு வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டான். அப்படியே, தம்பிக்கும் கல்யாண வீட்டைப் பார்க்க  ஒரே ஆவல்.

ஏக காலத்தில் இரண்டு கடிதங்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தன. ஒன்று கல்யாணப் பத்திரிகை ; மற்றொன்று இழவோலை. புது ஏற்பாட்டின் படி அண்ணன் இழவு வீட்டுக்குப் போனான். தம்பி கல்யாண வீட்டுக்குப் போனான்.

இழவு வீட்டில் நுழைந்த அண்ணன், ‘என்ன இப்படி அழுகையும் புலம்பலுமாய்க் கிடக்கிறீர்கள்! சீ நல்ல நாளில் இது என்ன வழக்கம்! சந்தோஷமாக வந்து உட்காருங்கள். இன்று யாருடைய சதிர் நடக்கப் போகிறது ? எந்த ஊர் மேளம் ? பட்டணப் பிரவேசம்..”  என்று சொல்லி முடிக்கு முன்பே, அங்கிருந்தவர்கள், அடித்து உதைத்து அண்ணனைத் தள்ளிவிட்டார்கள். ஒன்றும் புரியாமல் அண்ணன் ‘ தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் ‘ என்று ஊர் வந்து சேர்ந்தான்.

கல்யாண வீட்டிற்குப் போன தம்பி , போகும் போதே முக்காடு போட்டுக் கொண்டு போனான். அப்போது அங்கு நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மாப்பிளையும் ,பொண்ணும்  பூமாலைகளைச் சுமந்து கொண்டு, நாட்டியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே போனதம்பி , “ ஐயோ! இப்படி அநியாயச் சாவு வருமா உனக்கு ? என்ன ஐயா, எல்லோரும் சிரித்துக் கும்மாளம் போடுகிறீர்கள் ? நேரமோ இரவு. காலாகாலத்தில் மயானத்துக்குப் போக வேண்டாமா ? அவனை ( மாப்பிள்ளையை ) உட்கார்த்தி வைத்து வேடிக்கை பார்க்கிறீர்களா ? “ என்று அலறினான். அண்ணனுக்குக் கிடைத்த மரியாதைக்கு இரட்டிப்பு மரியாதை தம்பிக்குக் கிடைத்தது. அவனும் ஊருக்கு வந்து சேர்ந்தான்.

தகப்பனார் விபரம் அறிந்து, “ தெரியாத காரியத்தில் தலையிட்டால் இந்த அபாயம் தானப்பா. இனிமேல் அவரவர்களுக்கு  எதில் பழக்கமும், திறமையும் உண்டோ அதை மட்டும் செய்யுங்கள் “ என்று தம் குமாரர்களுக்குப் புத்திமதி சொன்னார்.

அது முதல் அண்ணன் கல்யாண வீட்டுக்கே போனான்; தம்பி கல்யாண வீட்டுக்குப் போகிறவர்களைப் போல அத்தனை குஷியோடு இழவு  வீடுகளுக்குப் போய் வந்தான்.

 

                                                                                                        -கு.அழகிரிசாமி-

                                                                                                      ' சக்தி களஞ்சியம் '