வழாநிலை மற்றும் வழுவமைதி தொடர்பான தெளிவினைப் பெறல்.
வழாநிலை மற்றும் வழுவமைதி தொடர்பான கேள்விகளுக்கான விடைகளைச் சரியாகத் தருதல்.

1. வழாநிலை என்றால் என்ன?
இருதிணை, ஐம்பால், மூவிடம், முக்காலம், வினா, விடை, மரபு ஆகிய ஏழும் தத்தம் நெறியில் மயங்காது வரின் அது வழாநிலை ஆகும்.
2. வழுநிலை என்றால் என்ன?
இருதிணை, ஐம்பால், மூவிடம், முக்காலம், வினா, விடை, மரபு ஆகிய ஏழும் தத்தம் நெறியில் மயங்கி வரின் வழுநிலை ஆகும்.
3.வழுக்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
எட்டு வகைப்படும் அவையாவன:
திணைவழு
பால்வழு
எண்வழு
இடவழு
காலவழு
வினாவழு
விடைவழு
மரபுவழு
4. திணை வழு என்றால் என்ன?
உயர் திணைச் சொல்லை அஃறிணையிலும், அஃறிணைச் சொல்லை உயர்திணையிலும் சொல்வது திணை வழுவாகும்.
உ+ம்: கண்ணன் வந்தது
பசு மேய்ந்தான்
இதன் வழாநிலை - கண்ணன் வந்தான்.
பசு மேய்ந்தது.
5. பால் வழு என்றால் என்ன?
ஐம்பால்களுள் ஒரு பாற்சொல்லை வேறொரு பாற் சொல்லோடு சொல்வது பால் வழுவாகும்.
உ+ம் : அவன் வந்தாள்.
அவள் வந்தான்.
இதன் வழாநிலை - அவன் வந்தான்.
அவள் வந்தாள்.
6.எண் வழு என்றால் என்ன?
ஒருமைச் சொற்களைப் பன்மைச் சொற்களோடும், பன்மைச் சொற்களை ஒருமைச் சொற்களோடும் சேர்த்துச் சொல்வது எண்வழுவாகும்.
உ+ம்: கண்கள் சிவந்தது.
கை முறிந்தன.
இதன் வழாநிலை - கண்கள் சிவந்தன.
கை முறிந்தது.
7.இடவழு என்பது யாது?
மூவிடங்களுள் ஒரு இடச் சொல்லை வேறொரு இடச் சொல்லோடு சொல்வது இட வழுவாகும்.
உ+ம்: நான் வந்தாய்.
நீ வந்தான்.
இதன் வழாநிலை - நான் வந்தேன்.
நீ வந்தாய்.
8.கால வழு என்றால் என்ன?
முக்காலங்களுள் ஒரு காலச் சொல்லை வேறொரு காலச்சொல்லொடு சொல்வது காலவழுவாகும்.
உ+ம்: நேற்று விளையாடுவான்.
இதன் வழாநிலை - நேற்று விளையாடினான்.
9.வினா வழு என்றால் என்ன?
வினா ஒன்றைப் பொருள் இயைபில்லாமல் சொல்வது வினா வழுவாகும்.
உ+ம்: முக்கண்ணன் மூன்று கண்ணுடன் வந்தானா?
இதன் வழாநிலை - முக்கண்ணன் வந்தானா?
10.விடை வழு என்றால் என்ன?
வினா ஒன்றுடன் இயைபில்லாது விடையினைச் சொல்வது விடை வழுவாகும்.
உ+ம் தில்லைக்கு வழி யாது?" என்று கேட்கும் போது "திருநகருக்கு செல்லும் வழி இது" என்று விடை கூறுவது.
11.மரபு வழு என்றால் என்ன?
ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு அமைந்த சொல்லால் அப்பொருளை, அவ்வழியே அச்சொல்லால் சொல்வது மரபு வழுவாகும்.
உ+ம்: தென்னையின் இளையது குட்டி.
இதன் வழாநிலை - தென்னையின் இளையது கன்று.