வாக்கிய உறுப்புக்கள் மற்றும் அடைமொழிகளை அறிதல்.

கேள்விக்கான விடையை சுருக்கமாகத் தெளிதல்.

1. வாக்கியம் ஒன்றில் இடம்பெறும் அடைமொழிகள் எவை? 

1) எழுவாய் அடைமொழி 

2) பயனிலை அடைமொழி

3) செயற்படுபொருள் அடைமொழி

 

2 எழுவாய் அடைமொழி என்றால் என்ன? 

வாக்கியத்தின் எழுவாயினை விசேடித்து நிற்கும் சொல் அல்லது சொற்றொடர் எழுவாய் அடைமொழி எனப்படும். 

உ+ம்:

சின்னத் தங்கை நடனம் ஆடினாள் - இங்கே தங்கை எனும் எழுவாயை விசேடித்து நிற்கும் “சின்ன” எனும் சொல்லானது எழுவாய் அடைமொழியாகும். 

 

3. பயனிலை அடைமொழி என்றால் என்ன? 

வாக்கியத்தின் பயனிலையினை விசேடித்து நிற்கும் சொல் அல்லது சொற்றொடர் பயனிலை அடைமொழி எனப்படும். 

உ+ம்: 

தங்கை கும்மி நடனத்தை விரைவாக ஆடினாள் – இங்கே ஆடினாள் எனும் பயனிலையை விசேடித்து நிற்கும் “விரைவாக" எனும் சொல்லானது பயனிலை அடைமொழி ஆகும். 

 

4. செயற்படுபொருள் அடைமொழி என்றால் என்ன? 

 வாக்கியத்தின் செயற்படுபொருளை விசேடித்து நிற்கும் சொல் அல்லது சொற்றொடர் செயற்படுபொருள் அடைமொழி எனப்படும். 

 உ+ம்:

தங்கை கும்மி நடனத்தை விரைவாக ஆடினாள் - இங்கே நடனத்தை எனும் செயற்படுபொருளை விசேடித்து நிற்கும் "கும்மி” எனும் சொல்லானது செயற்படுபொருள் அடைமொழியாகும்.

 

5. அடைமொழிகளின் பயன்கள் 2 தருக. 

1) வாக்கியத்தின் கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் 

2) வாக்கியத்தின் கருத்தை விரிவாக விளக்கும்.

 

6. பெயரடை என்றால் என்ன? 

வாக்கியம் ஒன்றில் இடம் பெறும் எழுவாயாகிய பெயர்ச் சொல்லை விசேடித்து நிற்கும் அடைமொழி பெயரடை எனப்படும்

உ+ம்:-  வெள்ளைப்பசு - இங்கே வெள்ளை என்பது பெயரடையாகும்.

 

7. வினையடை என்றால் என்ன? 

வாக்கியம் ஒன்றில் இடம் பெறும் பயனிலையாகிய வினைச் சொல்லை விசேடித்து நிற்கும் அடைமொழி வினையடை எனப்படும். 

உ+ம்:   துள்ளி ஓடியது -  இங்கே துள்ளி என்பது வினையடையாகும்.

 
8. வாக்கியங்களை அவை வெளிப்படுத்தும் கருத்திற்கேற்ப எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை? 

நான்கு வகைப்படுத்தலாம்.

 1) கூற்று வாக்கியம் 

 2) வினா வாக்கியம்

3) விருப்பு வாக்கியம்  -   ஏவல் வாக்கியம் 

                                                வியங்கோள் வாக்கியம் 

4) மெய்ப்பாட்டு வாக்கியம்

 

9. கூற்று வாக்கியம் என்றால் என்ன? 

 ஒரு செய்தியை அல்லது ஒரு உண்மையைக் கூறுவதாக அமையும் வாக்கியங்கள் கூற்று வாக்கியங்கள் எனப்படும். உ+ம்: காற்றுடன் மழை பெய்தது.

 

10. வினா வாக்கியம் என்றால் என்ன? 

பதிலொன்றை எதிர்பார்த்து ஒன்றை அறியும் நோக்குடன் வினவும் வாக்கியம் வினாவாக்கியம் எனப்படும். 

உ+ம்: நேற்று மழை பெய்ததா?