வாக்கியங்களையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்ளல்.

கேள்விக்கான விடையைச் சுருக்கமாக அணுகுதல்.

1. விருப்பு வாக்கியம் என்றால் என்ன? அதன் பிரிவுகள் எவை? 

பேசுபவரின் விருப்பத்தை வெளிப்படுத்தும் வாக்கியம் விருப்பு வாக்கியம் எனப்படும். 

இது இரண்டு பிரிவுகளையுடையது. 

அவையாவன:

1) ஏவல் வாக்கியம் 

2) வியங்கோள் வாக்கியம்

 

2. ஏவல் வாக்கியம் என்றால் என்ன? 

முன்னிலையிலுள்ள ஒருவரை அல்லது ஒன்றை விளித்து இதைச் செய் அல்லது செய்யாதே எனப் பணிப்பது அல்லது ஏவுவது போல் அமையும் வாக்கியம் ஏவல் வாக்கியம் எனப்படும்.

 உ+ம்: புத்தகத்தை எடுத்துத்தா.

 

3. வியங்கோள் வாக்கியம் என்றால் என்ன? 

 க, இய, இயர் எனும் விகுதி பெற்று இருதிணை, ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாய் அமைந்து வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் எனும் நாற்பொருளையும் தரும் வாக்கியம் வியங்கோள் வாக்கியம் எனப்படும். 

 உ+ம்: வாழ்க  

 

4. வியங்கோள் வாக்கியம் உணர்த்தும் நாற்பொருள்களும் எவை? 

1) வாழ்த்துதல்   உ+ம்:   பல்லாண்டு வாழ்க. 

2) வைதல்            உ+ம்:   அழிந்தொழிக.

3) வேண்டல்       உ+ம்:   தருக. 

4) விதித்தல்       உ+ம்:   செய்க. 

 

5. வியங்கோள் வினை விகுதிகள் எவை? 

க, இய, இயர், அ, அல், தல் 


6.மெய்ப்பாட்டு வாக்கியம் என்றால் என்ன? 

ஒருவரது உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமையும் வாக்கியம் மெய்ப்பாட்டு வாக்கியம் எனப்படும். 

உ+ம்:  ஐயோ! பாம்பு! பாம்பு!

             என்னே அழகு!

 

7.வாக்கியங்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை? 

நான்கு வகைப்படுத்தலாம். அவையாவன,

1) தனிவாக்கியம் 

2) தொடர்வாக்கியம் 

3) கூட்டு வாக்கியம் 

4) கலப்பு வாக்கியம்

 

8.தனிவாக்கியம் என்றால் என்ன? 

ஒரு எழுவாயின் முற்றுப்பெற்ற ஒரேயொரு செயலைக் குறிக்கும் வாக்கியம் தனிவாக்கியம் எனப்படும். 

உ+ம்: மயில் அழகாக ஆடியது. 


9.தொடர்வாக்கியம் என்றால் என்ன? 

ஒரு எழுவாயின் பல செயல்களுள் ஒரு செயல் மாத்திரம் முற்றுப் பெற்றிருக்க, ஏனைய செயல்கள் முற்றுப்பெறாத குறைச் சொற்களாக வரும் வாக்கியங்கள் தொடர் வாக்கியங்கள் எனப்படும். 

உ+ம்:கண்ணன் காலையில் எழுந்து, பாடசாலை சென்று, பாடங்களைப் படித்தான் 

இங்கே எழுதல், செல்லுதல், படித்தல் என்னும் மூன்று செயல்களைச் செய்யும் எழுவாயின் செயல்களுள் படித்தல் எனும் செயல் மாத்திரமே படித்தான் என முற்றுப் பெற்று வந்துள்ளது.


10.கூட்டு வாக்கியம் என்றால் என்ன? 

ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களும், பலமுற்றுப் பயனிலைகளும் கொண்ட வாக்கியம் கூட்டு வாக்கியம் எனப்படும். 

உ+ம்: மேகம் கறுத்தது; மின்னல் வெட்டியது; இடி முழங்கியது; மழை பொழிந்தது.