வாக்கியங்களையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்ளல்.
கேள்விக்கான விடையைச் சுருக்கமாக அணுகுதல்.

11.கலப்புவாக்கியம் என்றால் என்ன?
ஒரு தலைமை வாக்கியத்துடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் இணைந்து வருவது கலப்பு வாக்கியம் எனப்படும்.
உ+ம்: நாளை சுற்றுலாவுக்குச் செல்வதாக ஆசிரியர் கூறினார்.
இங்கே “ஆசிரியர் கூறினார்” என்பது தலைமைத் தொடராகவும், “நாளை சுற்றுலாவுக்குக் கூட்டிச் செல்லுதல்" என்பது சார்பு வாக்கியமாகவும் காணப்படுகிறது.
12.தனிவாக்கியத்தைத் தொடர்வாக்கியமாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள் எவை?
1) தனிவாக்கியங்களில் வரும் வினை முற்றை எச்சமாக மாற்றுதல் வேண்டும்.
உ+ம்:
அ) மாலா பூக்களைப் பறித்தாள்.
ஆ) அவற்றை மாலையாகத் தொடுத்தாள்.
இ) சுவாமிக்குச் சாத்தினாள்.
இத் தனி வாக்கியங்களைத் தொடர்வாக்கியமாக்கும் போது பறித்தாள், தொடுத்தாள் எனும் வினைமுற்றுகளை பறித்து, தொடுத்து எனும் வினை எச்சங்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றியமைக்கும் போது இது பின்வரும் வடிவினைப் பெறும்.
மாலா பூக்களைப் பறித்து, மாலைகளாகத் தொடுத்துசுவாமிக்குச் சாத்தினாள்.
2) தனிவாக்கியங்களில் வரும் வினைமுற்றைப் பெயரெச்சமாகமாற்றுதல் வேண்டும்.
உ+ம்:
அ) கணபதி அந்த ஊரின் தலைவராக இருந்தார்.
ஆ) அந்த மாளிகை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.
இ) அவர் அம்மாளிகையிலேயே வாழ்ந்தார். - இதில் கட்டப்பட்டது, வாழ்ந்தார் எனும் வினைமுற்றுக்களைப் பெயரெச்சமாக மாற்றியமைக்கும் போது அது பின்வரும் வடிவினைப் பெறும்.
பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட மாளிகையில் வாழ்ந்த கணபதி ஊரின் தலைவராக இருந்தார் - இங்கே கட்டப்பட்ட மாளிகை, வாழ்ந்த கணபதி என்பன பெயரெச்சங்களாகும்.
3) தனிவாக்கியங்களில் வரும் வினை முற்றை விலக்குதல் வேண்டும்.
உ+ம்:
அ) கண்ணன் தூரிகையை எடுத்தான்.
ஆ) வர்ணம் தீட்டினான். - இதில் வரும் எடுத்தான் எனும் வினைமுற்றை நீக்கினால் வரும் வாக்கியம் பின்வரும் வடிவினைப் பெறும்:
கண்ணன் தூரிகையால் வர்ணந் தீட்டினான்.
4) தனிவாக்கியங்களுடன் எண்ணும்மை சேர்த்தல் வேண்டும்.
உ+ம்:
அ) குமார் விளையாடினான்.
ஆ) நாதன் விளையாடினான். - இங்கே குமார் , நாதன் எனும் பெயர்களுடன் எண்ணும்மையினைச் சேர்த்து எழுதும் போது அது பின்வரும் வடிவினைப் பெறும்.
குமாரும் நாதனும் விளையாடினர்.