சொற்றொடர்களையும் வாக்கிய உறுப்புக்களையும் அறிதல்-01

கேள்விக்கான விடைகளைச் சரியாக விளக்கித் தருதல்.

1.சொற்றொடர் என்றால் என்ன? 

இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றிணைந்து ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அமைவது சொற்றொடர் எனப்படும்.

உ+ம்: அம்மா காலை உணவு சமைத்தார்.

 

2.வாக்கியம் என்றால் என்ன? 

சொற்கள் பொருள்படத் தொடர்ந்து, கருத்து முற்றுப் பெற்று நிற்கும் தொடர்மொழி வாக்கியம் எனப்படும்.

உ+ம்: கார்த்தி பாடம் படித்தான். 

 

3.வாக்கிய அமைப்புக்கு இன்றியமையாத சொற்றொடர்கள் எவை? 

1) பெயர்ச் சொற்றொடர் 

2) பெயரெச்சச் சொற்றொடர் 

3) வினையெச்சச் சொற்றொடர்

 

4. பெயர்ச் சொற்றொடர் என்றால் என்ன? 

பெயர்ச் சொல்லொன்றைத் தலைமை உறுப்பாகக் கொண்டமைந்த சொற்றொடர் பெயர்ச் சொற்றொடர் எனப்படும். 

உ+ம்: கண்ணனும் குமாரும் நண்பர்கள்.

இச்சொற்றொடரில் கண்ணனும், குமாரும் தலைமை உறுப்பாக அமைவதால் இது பெயர்ச் சொற்றொடர் எனப்பட்டது.

 

5.பெயரெச்சச் சொற்றொடர் என்றால் என்ன? 

பெயரெச்சச் சொல்லொன்றிற்கு அடைமொழியாக வரும் சொல் எச்சமாக இருப்பின் அது பெயரெச்சச் சொற்றொடர் எனப்படும்.

உ+ம்:  குகைகளில் வசித்த வேடர்.

இங்கே வேடர் எனும் பெயர்ச் சொல்லுக்கு அடைமொழியாகக் “குகைகளில் வசித்த" எனும் தொடர் மொழி வந்துள்ளது. இதில் வசித்த என்பது எச்சமாகையால் பெயராகிய வேடனுடன் சேர்ந்து பெயரெச்சமாகி, பெயரெச்சச் சொற்றொடராகியது.

 

6. வினையெச்சச் சொற்றொடர் என்றால் என்ன? 

வினைச் சொல்லொன்றிற்கு அடைமொழியாக வரும் சொல் எச்சமாக இருப்பின் அது வினையெச்சச் சொற்றொடர் எனப்படும். 

உ+ம்:  விரைந்து ஓடிட வேண்டும்.

இங்கே ஓடி எனும் 'வினைச் சொல்லுக்கு அடைமொழியாக விரைந்து எனும் தொடர் மொழி வந்துள்ளது. இதில் விரைந்து என்பது எச்சமாகையால் அது வினையாகிய ஓடி, எனும் சொல்லுடன் சேர்ந்து வினையெச்சமாகி, வினையெச்சச் சொற்றொடராகியது. 

 

7. வாக்கியம் ஒன்றை இனங்காணக் கூடிய வழிகள் இரண்டு கூறுக.

1) முற்றுப்பயனிலை பெற்றுக் காணப்படும். 

2) கருத்தொன்றைப் புலப்படுத்தும். 

 

8. வாக்கியம் ஒன்றில் இடம் பெறவேண்டிய, பிரதான வாக்கிய உறுப்புக்கள் எவை? 

1) எழுவாய் 

2) பயனிலை

3) செயற்படுபொருள்

 

9. எழுவாய் என்றால் என்ன? 

வாக்கியம் ஒன்றில் கருத்து எழுமிடம் எழுவாய் எனப்படும். 

உ+ம்: கண்ண ன் படித்தான்.

இங்கே கண்ணன் என்பது எழுவாய்

 

10.பயனிலை என்றால் என்ன? 

வாக்கியத்தில் இடம் பெறும் எழுவாயின் கருத்து முற்றுப் பெற்று நிற்கும் இடம் பயனிலை எனப்படும். 

உ+ம்:கண்ணன் படித்தான். இங்கே கண்ணன் எனும் எழுவாயின் செயல் முற்றுப் பெற்று நிற்கும் இடம் படித்தான் என்பதாகும். எனவே படித்தான் என்பது பயனிலை.