முயலும் ஆமையும் கதை

பாடம் 8.1

 

முயலும் ஆமையும்

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்குத் தான்  வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் இருந்தது. ஒருநாள் காட்டில் விளையாட்டுப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது முயல் மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாகத் தன்னுடன் ஓட்டப்பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை என்று கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்கவேண்டுமென நினைத்துப் போட்டிக்குச் சம்மதம் தெரிவித்தது.

பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. தூரத்தைத் தீர்மானித்த பின் ஓட்டப்பந்தயம் துவங்கியது.

முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மனம் தளராமல் தன்னுடைய பயணத்தைத் தொடந்து கொண்டிருந்தது. முக்கால் வாசித் தூரம் வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும், சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் ஓடலாம் என நினைத்துக் கொண்டு ஒரு மரத்தின் கீழ் உறங்கியது.

வெகுநேரம் கழித்து நம்பிக்கை இன்றி அந்த வழியே வந்துகொண்டிருந்த ஆமை, முயல் தூங்கும் காட்சியைக்கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது. ஆமையோ மெதுமெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல் ஆமை எல்லையை நெருங்குவதை கண்டு ஓட்டம் பிடித்தது.  எனினும் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.  ஆமையைக் கண்டு முயல் வெட்கித் தலை குனிந்தது.