புணர்ச்சிகளையும் அதன் தன்மை நிலைகளையும் அறிந்து கொள்ளல்-02

கீழே கொடுக்கப்படும் வினாவுக்கான விடையைச் சுருக்கமாக விவரித்தல்-02

1.தொகைநிலைத் தொடர்கள் எவை? 

எழுவாய்த் தொடர் 

விளித்தொடர் 

பெயரெச்சத் தொடர் 

வினையெச்சத்தொடர் 

தெரிநிலை வினைமுற்றுத்தொடர் 

குறிப்பு வினைமுற்றுத்தொடர் 

இடைச்சொற்றொடர் 

உரிச்சொற்றொடர் 

அடுக்குத்தொடர் 

 

2.ஒலிமரபின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை? எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:  

இயல்புப் புணர்ச்சி 

விகாரப் புணர்ச்சி

 

3.இயல்புப் புணர்ச்சி என்றால் என்ன? 

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் சேரும் போது அவற்றின் ஒலி அமைப்பிலே மாற்றம் ஏற்படாது புணரும் புணர்ச்சி இயல்புப் புணர்ச்சியாகும். 

உ+ம்: பொன் + மணி =  பொன்மணி

 

4. இயல்புப் புணர்ச்சி எத்தனை விதமாக நிகழும்?அவை எவை? 

இரண்டு விதமாக நிகழும். அவையாவன.

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இயல்பாகிப் புணரும்.

உ+ம்: 

மலர் + வனம் =  மலர்வனம்

பல் + வரிசை =  பல்வரிசை 

 

நிலைமொழி ஈற்று மெய்யும், வருமொழி முதல் உயிரும் சேர்ந்து உயிர்மெய்யாகிப் புணரும்.

உ+ம்:- 

கடல் + அலை = கடலலை (ல் + அ = ல) 

வாள் + உண்டு = வாளுண்டு (ள் + உ = ளு) 

வான் + ஊர்தி = வானூர்தி (ன் + ஊ = னூ)



5.விகாரப் புணர்ச்சி என்பது யாது? 

நிலை மொழி ஈறும் வருமொழி முதலும் சேரும் போது ஓர் எழுத்தேனும், சாரியையேனும் தோன்றுதலும், திரிதலும், கெடுதலும் காரணமாக அவற்றின் ஒலி அமைப்பிலே மாற்றங்கள் ஏற்படப் புணரும் புணர்ச்சி விகாரப் புணர்ச்சியாகும். 

உ+ம்: மரம் + வேர் = மரவேர்

 

6.விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை எவை?

 மூன்று வகைப்படும். அவையாவன:

1) தோன்றுதல் விகாரப் புணர்ச்சி 

2) திரிதல் விகாரப் புணர்ச்சி 

3) கெடுதல் விகாரப் புணர்ச்சி 

 

7.தோன்றுதல் விகாரப் புணர்ச்சி என்றால் என்ன? 

நிலை மொழி ஈறும், வருமொழி முதலும் சேரும் போது ஓர் எழுத்தேனும், சாரியையேனும்  தோன்றுதல் காரணமாக அவற்றின் அமைப்பிலே மாற்றங்கள் ஏற்படப் புணரும் புணர்ச்சி தோன்றுதல் விகாரப் புணர்ச்சி ஆகும். 

உ+ம்: 

வாழை + பழம் =  வாழைப்பழம்  (ப், தோன்றியது) 

பூ + கொடி =  பூங்கொடி  (ங் தோன்றியது)

பல + பல =  பலப்பல  (ப், தோன்றியது) 

மெய் + மயக்கம் =  மெய்ம்மயக்கம்  (ம், தோன்றியது)

 

8.திரிதல் விகாரப் புணர்ச்சி என்றால் என்ன? 

நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் சேரும் போது ஓர் எழுத்தேனும், சாரியையேனும் திரிதல் காரணமாக ஒலி அமைப்பில் மாற்றம் ஏற்படப்புணரும் புணர்ச்சி திரிதல் விகாரப் புணர்ச்சியாகும். 

உ+ம்:- 

முள் + செடி =  முட்செடி  (ள், ட் ஆகத் திரிந்தது) 

கல் + குகை =  கற்குகை  (ல், ற் ஆகத் திரிந்தது) 

கண் + புலன் =  கட்புலன்  (ண், ட் ஆகத் திரிந்தது) 

பொன் + குடம் =  பொற்குடம்  (ன், ற் ஆகத் திரிந்தது) 

 

9.கெடுதல் விகாரப்புணர்ச்சி என்றால் என்ன? 

நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் சேரும் போது ஓர் எழுத்தேனும், சாரியையேனும் கெடுதல் காரணமாக ஒலி அமைப்பில் மாற்றம் ஏற்படப் புணரும் புணர்ச்சி கெடுதல் விகாரப் புணர்ச்சியாகும். 

உ+ம்:- 

மரம் + வேர் = மரவேர் (ம் கெட்டது) 

நிலம் + வலயம் = நிலவலயம் (ம் கெட்டது) 

வட்டம் + முகம் = வட்டமுகம் (ம் கெட்டது) 

நிலம் + வளம் = நிலவளம் (ம் கெட்டது)

 

10.நிலை மொழி ஈற்றில் உயிரும், வருமொழி முதலில் உயிரும் வரப் புணரும் புணர்ச்சியில் தோன்றுவது எது? 

உடம்படுமெய் அல்லது உடன்படுமெய் தோன்றும். 

 

மேலும் பாடங்கள்