எழுத்திலக்கணங்களை அறிதல் – 01
பின்வரும் கேள்விக்கான விடையை சுருக்கமாகத் தருதல்.

1.எழுத்து எனப்படுவது யாது?
மொழிக்கு முதற் காரணமும், அணுத்திரளின் காரியமுமாகிய ஒலியானது எழுத்து எனப்படும்.
2.எழுத்து எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரு வகைப்படும்.
அவையாவன:
முதலெழுத்து
சார்பெழுத்து
3. முதலெழுத்துக்கள் எத்தனை? அவை எவை?
முதலெழுத்துக்கள் முப்பதாகும்.
அவையாவன: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துக்கள் -12
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன், எனும் மெய் எழுத்துக்கள் -18
முதலெழுத்துக்கள் மொத்தம் .... 30
4. சார்பெழுத்துக்கள் எத்தனை? அவை எவை?
சார்பெழுத்துக்கள் பத்தாகும்.
அவையாவன:
1) உயிர்மெய் எழுத்து
2) குற்றியலிகரம்
3) ஆய்தவெழுத்து
4) ஐகாரக்குறுக்கம்
5) உயிரளபெடை
6) ஒளகாரக்குறுக்கம்
7) ஒற்றளபெடை
8) மகரக்குறுக்கம்
9) குற்றியலுகரம்
10) ஆய்தக்குறுக்கம்
5.உயிர் எழுத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை எவை?
இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
உயிர்க்குறில் அல்லது குற்றெழுத்து.
உயிர்நெடில் அல்லது நெட்டெழுத்து.
6.உயிர்க்குறிலாய் வரும் எழுத்துக்கள் எவை?
அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்துமாகும்.
7.உயிர்நெடிலாய் வரும் எழுத்துக்கள் எவை?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் ஏழுமாகும்.
8.குற்றெழுத்து என்றால் என்ன?
ஒலியமைப்பில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்கள் குற்றெழுத்துக்கள் எனப்படும்.
9.நெட்டெழுத்து என்றால் என்ன?
ஒலியமைப்பில் நீண்ட ஓசையுடைய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள் எனப்படும்.
10. மெய்யெழுத்துக்களை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை எவை?
மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அவையாவன:
i) வல்லின மெய்யெழுத்துக்கள்
ii) மெல்லின மெய்யெழுத்துக்கள்
iii) இடையின மெய்யெழுத்துக்கள்