எழுத்திலக்கணங்களை அறிதல்–02
கீழே தரப்படும் வினாவுக்கான விடையைச் சுருக்கமாகத் தருதல்.

1.வல்லின மெய்யெழுத்துக்கள் எவை? அவை ஏன் இப்பெயரைப் பெற்றன?
க், ச், ட், த், ப், ற் என்பன வல்லின மெய்யெழுத்துக்களாகும். இவை ஓசையமைப்பில் வன்மையான ஒலிப்பினையுடையன, ஆகையால் இப்பெயரைப் பெற்றன.
2.மெல்லின மெய்யெழுத்துக்கள் எவை? அவை ஏன் இப்பெயரைப் பெற்றன?
ங், ஞ், ண், ந், ம், ன், என்பன மெல்லின மெய்யெழுத்துக்களாகும். இவை ஓசையமைப்பில் மென்மையான ஒலிப்பினையுடையன ஆகையால் இப்பெயரைப் பெற்றன.
3. இடையின மெய்யெழுத்துக்கள் எவை? அவை ஏன் இப்பெயரைப் பெற்றன?
ய், ர், ல், வ், ழ், ள், என்பன இடையின மெய்யெழுத்துக்களாகும். இவை ஓசையமைப்பில் வல்லின மெய்கள் போல் வன்மையின்றியும், மெல்லின மெய்கள் போல் மென்மையின்றியும் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதொரு ஒலிப்பினை உடையவையாகையால் இப்பெயரைப் பெற்றன.
4. உயிர் மெய்க்குற்றெழுத்துக்கள் எத்தனை?
தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு (18) உள்ளன மற்றும் உயிர்க்குற்றெழுத்துக்கள் ஐந்து (5) உள்ளன. அவை இணைந்து உருவாகும் உயிர்மெய்க் குற்றெழுத்துக்கள் தொண்ணூறு (90) ஆகும்.
5. உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் எத்தனை?
தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு (18) உள்ளன. மற்றும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழு (7) உள்ளன. அவை இணைந்து உருவாகும் உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் நூற்று இருபத்தாறு (126) ஆகும்.
6.தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களைப் பட்டியற்படுத்திக் காட்டுக?
உயிரெழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள் - 18
உயிர்மெய்யெழுத்துக்கள் (உயிர் 12 x மெய் 18) - 216
ஆய்த எழுத்து - 01
தமிழ் நெடுங்கணக்கிலுள்ள மொத்த எழுத்துக்கள் - 247
7. வினா எழுத்து எனப்படுவது யாது?
வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் எனப்படும்.
அவை
ஆ, எ, ஏ, ஓ, யா
8. வினா எழுத்து எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும்.
அவையாவன:
1)அகவினா
ii) புறவினா
9. அகவினா என்றால் என்ன?
அகத்தே நின்று பொருள் தரும் வகையில் அமையும் வினா எழுத்துக்கள் அகவினா எனப்படும்.
உ+ம்: ஏன்? யாவன்?
10. புறவினா என்றால் என்ன?
புறத்தே நின்று பொருள் தரும் வகையில் அமையும் வினா எழுத்துக்கள் புறவினா எனப்படும்.
உ+ம்: எக்குதிரை? யாங்ஙனம்?
கண்ணனா? கண்ணனோ? கண்ணனே?