எழுத்திலக்கணங்களை அறிதல்–03
பின்வரும் வினாவுக்கான விடையைச் சுருக்கமாகத் தருதல்.

1.வினா எழுத்துக்கள் எவை?
எ, யா, ஆ, ஓ, ஏ என்பனவாகும்.
2.வாக்கியமொன்றின் முதலில் வரும் வினா எழுத்துக்கள் எவை?
எ, யா எனும் இரண்டுமாகும்.
உ +ம்: எது? யார்?
3.வாக்கியமொன்றின் இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் எவை?
ஆ, ஓ எனும் இரண்டுமாகும்.
உ+ம்: அவனா? (ன்+ஆ =னா)
அவனோ? (ன்+ஓ =னோ)
4.வாக்கியமொன்றின் முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்துக்கள் எவை?
ஏ காரம் மட்டுமே முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்தாகும்.
உ+ம்: ஏன்? - முதலில் வந்துள்ளது.
அவனே? - இறுதியில் வந்துள்ளது (ன்+ஏ = னே)
5. இன எழுத்துக்கள் என்றால் என்ன?
எழுத்துக்களானது அதன் ஒலிப்பு முறைமை மற்றும் ஒரே இடத்தில் பிறத்தல் போன்ற காரணங்களால் உறவுடைய எழுத்துக்களாக மாறும் போது அவை இனவெழுத்துக்கள் எனப்படும்.
6.இனவெழுத்துக்களாகக் கொள்ளப்படும் எழுத்துக்கள் எவையெனக்காட்டி, அவற்றின் இனங்களையும் குறிப்பிடுக.
1) உயிர் எழுத்துக்களில் குறில் ஐந்திற்கும், ஒத்த நெடில் ஐந்தும் இனமாகும்.
உ+ம்: அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஒ-ஓ.
2) மெய்யெழுத்துக்களில் வல்லினமெய்கள் ஆறிற்கும் ஒத்த மெல்லின மெய்கள் ஆறும் இனமாகும்.
உ+ம்: க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன்.
3) இடையின மெய்களுக்கு இன எழுத்து இல்லை.
4) உயிர் எழுத்துக்களில் ஐ-இ உம் ஒள-உ வும் இனமாகும்.
7.சுட்டுப் பொருள் உணர்த்தும் எழுத்துக்கள் எவை?
அ, இ, உ என்பனவாகும்.
8.சுட்டெழுத்துக்கள் என்றால் என்ன?
அ, இ, உ எனும் மூன்று உயிர்க்குறிலும் மொழிக்கு முதலிலே தனித்து சுட்டுப்பொருளைக்காட்ட வருமாயின் அது சுட்டெழுத்து எனப்படும்.
9. சுட்டெழுத்தை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை?
இரண்டு வகைப்படுத்தலாம்.
அவையாவன:
1) அகச்சுட்டு 2) புறச்சுட்டு
10. அகச்சுட்டு என்றால் என்ன?
அகத்தே நின்று பொருள் தரும் சுட்டெழுத்துக்கள் அகச்சுட்டு எனப்படும்.
உ+ம்: அவன், இவன், உவன்.
11. புறச்சுட்டு என்றால் என்ன?
புறத்தே நின்று பொருள் தரும் சுட்டெழுத்துக்கள் புறச்சுட்டு எனப்படும்.
உ+ம்: அவ்வீடு, இவ்வீடு, உவ்வீடு.