பதங்களையும் அதன் வகைகளையும் அறிதல்.

கேள்விக்கான விடையை சுருக்கமாகத் தருதல்.

1. பதம் என்றால் என்ன?

தனித்து ஓர் எழுத்தேனும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களேனும் பொருள் தருமாயின் அது பதம் எனப்படும். 

உ+ம்:-  

ஆ (பசு) - தனித்து ஓர் எழுத்து

மரம் - ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் 

 

2. ஓர் எழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

ஓர் எழுத்துத் தனித்து நின்று பொருள் தருமாயின் அது ஓர் எழுத்தொரு மொழி எனப்படும்.

உ+ம்:- 

ஆ (பசு) கா (சோலை) மா (பெரிய) கோ (மன்னன்) (துன்பப்படு) து (உண்) 

 

3. ஓரெழுத்தாலாகிய மொழிகளுள் சிறப்புடையவை எனக் கொள்ளப்படுபவை எத்தனை? 

   நாற்பத்திரண்டு

 

4.தொடர் எழுத்து ஒரு மொழி என்றால் என்ன? 

ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் பொருள் தரப் பொருந்தி, தொடர்ந்து நின்று பொருள் தருமாயின் அது தொடரெழுத்தொரு மொழி எனப்படும். 

உ+ம்: அலை, அன்பு, கானகம், புத்தகம்…

 

5.பதம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:

1) பகுபதம் 

2) பகாப்பதம்

 

6.பகுபதம் என்றால் என்ன? 

பகுபத உறுப்புக்களாகப் பகுக்கக் கூடியதும், அவ்வாறு பகுப்பதால் பொருட்பயனுடையதாகவும் விளங்குஞ் சொல் பகுபதம் எனப்படும்.  

உ+ம்:  படித்தான் படி + த் + த் + ஆன்

 

7.பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன 

1) பெயர்ப் பகுபதம் உ+ம்: கண்ணன் 

2) வினைப் பகுபதம் உ+ம்: படித்தான் 

 

8. பெயர்ப் பகுபதங்களாக வரும் பெயர்ச் சொற்கள் எவை?

 1) பொருட்பெயர்          உ+ம்: பொன்னன் 

 2) இடப் பெயர்              உ+ம்:  அகத்தன் 

 3) காலப் பெயர்           உ+ம்:  ஆதிரையான் 

 4) சினைப் பெயர்       உ+ம்:  கண்ணன் 

 5) குணப் பெயர்          உ+ம்:  கரியன் 

 6) தொழிற் பெயர்     உ+ம்:  ஊணன்

 

9.வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:

1) தெரிநிலைவினைப் பகுபதம் உ+ம்: படித்தான் 

2) குறிப்புவினைப் பகுபதம் - உ+ம்: கரியன்

 

10.பகுபத உறுப்புக்கள் எவை? 

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனும் ஆறும் பகுபத உறுப்புக்களாகும்.

 

11.பகுதி என்றால் என்ன? 

பெயர், வினைப் பகுபதங்களின் முதலில் நிற்கும் கூறாகிய பகாப்பதமே பகுதி எனப்படும். 

உ+ம்:

கண்ணன் - கண் + ண் + அன் (பகுதி கண்) 

படித்தான் - படி + த் + த் + ஆன் (பகுதி படி)

 

12.பெயர்ப் பகுபதங்களுக்கும், குறிப்புவினைப் பகுபதங்களுக்கும் பகுதிகள் எவை?

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறு வகைப் பெயர்ச் சொற்களும் சிறுபான்மை இடைச்சொற்களும் பகுதிகளாய் வரும்.

 

13.தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?

பெயர்ச்சொற்கள்   -    உ+ம்: சித்திரித்தான் (சித்திரம்) 

வினையடிகள்          -    உ+ம்: நடந்தான் (நட) 

இடைச்சொற்கள்     -    உ+ம்: போன்றான் (போல்) 

உரிச்சொற்கள்        -    உ+ம்: சான்றான் (சால்)

 

மேலும் பாடங்கள்