புணர்ச்சிகளையும் அதன் தன்மை நிலைகளையும் அறிந்து கொள்ளல்-03
கீழே கொடுக்கப்படும் வினாவுக்கான விடையை சுருக்கமாக விவரித்தல்-03

1. உடம்படுமெய் என்றால் என்ன?
நிலைமொழி ஈற்றிலும், வருமொழி முதலிலும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய் உடம்படுமெய் எனப்படும்.
2.எவ்வெவ் மெய்கள் உடம்படுமெய்யாக வரும்?
ய், வ்
3.எந்த உயிர் ஈற்றின் முன் உயிர் வரும் போது "ய" கர உடம்படுமெய் தோன்றும்?
நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ எனும் மூன்று உயிர்களும் வர வருமொழி முதலில் ஏதாவது ஓர் உயிர் வந்து சேரும் போது "ய” கர உடம்படுமெய் தோன்றும்.
உ +ம்:
கிளி + அழகு = கிளியழகு (ய் + அ = ய)
தீ + எரிந்தது = தீயெரிந்தது (ய் + எ = யெ)
விலை + இல்லை = விலையில்லை (ய் + இ = யி)
4.எந்த உயிர் ஈற்றின் முன் உயிர் வரும் போது "வ" கர உடம்படுமெய் தோன்றும்?
நிலைமொழி ஈற்றில் அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழு உயிர்களும் வர வருமொழி முதலில் ஏதாவது ஓர் உயிர் வந்து சேரும் போது "வ்" உடம்படுமெய் தோன்றும்.
உ+ம்:-
சில + எறும்பு = சிலவெறும்பு (வ்+ எ = வெ)
விலா + எலும்பு = விலாவெலும்பு (வ் + எ = வெ)
வழு + அல்ல = வழுவல்ல (வ் + அ = வ)
பூ + அழகு = பூவழகு (வ் + எ = வ)
நொ + அழகு = நொவ்வழகு (வ்)
கோ + அரன் = கோவரன் (வ் + அ = வ)
கௌ + எடு = கௌவெடு (வ் + எ = வெ)
5."ய்", "வ்" என்னும் உடன்படு மெய்கள் எப்போது தோன்றும்?
நிலைமொழி ஈற்றில் “ஏ” எனும் உயிர்வரும் போது, வருமொழி முதலில் ஏதாவது ஓர் உயிர் வந்து சேருமாயின் ய், வ் எனும் இரு உடம்படுமெய்களும் தோன்றும்.
உ+ம்:
சே + அடி = சேயடி அல்லது சேவடி
அவனே + அழகன் = அவனேயழகன் அல்லது அவனேவழகன்
6. குற்றியலுகர ஈற்றின் முன் உயிர்வரும் போது எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் வர வருமொழி முதலில் ஏதாவதொரு உயிர் வரின் குற்றியலுகரத்தின் உகரம் தான் ஏறிநின்ற மெய்யை விட்டுக் கெடும். உகரம் கெட்ட மெய் மேல் வந்த உயிர் ஏறி உயிர்மெய்யாகிப் புணரும்.
உ+ம்:
கொக்கு+ அழகு = கொக்கழகு
பாக்கு + எடு = பாக்கெடு
சங்கு + அரி = சங்கரி
இங்கே கொக்கு என்பதின் "கு" விலுள்ள "உ" கெட “க்" உடன் "அ" வந்து சேர “க் + அ = க" எனப் புணர்ந்து கொக்கழகாகியது. (இவ்வாறே ஏனையவையும் புணரும்)
உ+ம்:
கொக்கு + அழகு
கொக் + க் + உ + அழகு = கொக்கழகு
7.குற்றியலுகர ஈற்றின் முன் "ய" கரம் வரும்போது எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலை மொழி ஈற்றில் குற்றியலுகரம் வர வருமொழி முதலில் யகரம் வரின் குற்றியலுகரத்தின் உகரம் இகரமாகத் திரிந்து புணரும்.
உ+ம்:-
கொக்கு + யாது = கொக்கியாது
நாகு + யாப்பு = நாகியாப்பு
இங்கே கொக்கு என்பதிலுள்ள “கு” “கி” ஆகி வருமொழியுடன் சேர்ந்து கொக்கியாது எனப் புணர்ந்துள்ளது.
உ+ம்:-
'கொக்கு + யாது (க் + உ)
கொக்கி + யாது = கொக்கியாது
(க் + இ)
8.குற்றியலுகரப் புணர்ச்சி விதிபெறும் வேறு உகரங்கள் உள்ளனவோ? அவை எவை?
ஆம் சில முற்றியலுகரங்களும் குற்றியலுகரப்புணர்ச்சி விதியைப் பெறும் இயல்புடையன.
உ+ம்:- கதவு + அழகு = கதவழகு
கதவு + யாது = கதவியாது
9.எகர வினா ஈற்றின் முன் உயிர் வரும்போது எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலை மொழி ஈற்றில் “எ" கரத்தை முதலாகவுடைய வினா வர வருமொழி முதலில் உயிர் வரின் "வ" கரம் தோன்றும்.
எது (?) + அழகு = எதுவழகு?
எது (?) + இன்பம் = எதுவின்பம்?
10. எகர வினா ஈற்றின் முன் யகரம் வரும் போது எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலை மொழி ஈற்றில் "எ" கரத்தை முதலாகவுடைய வினா வர வருமொழி முதலில் "ய" கரம் வரின் "வ" கரம் தோன்றும்.
உ + ம்: எது (?) + யானை = எவ்யானை?