புணர்ச்சிகளையும் அதன் தன்மை நிலைகளையும் அறிந்து கொள்ளல்-04
கீழே கொடுக்கப்படும் வினாவுக்கான விடையை சுருக்கமாக விவரித்தல்-04

1. அ, இ, உ எனும் சுட்டெழுத்தின் முன் உயிர் வரும் போது எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலை மொழி ஈற்றில் அ, இ, உ எனும் சுட்டெழுத்துக்கள் வர வருமொழி முதலில் உயிர் வரின் "வ" கரம் தோன்றும்.
உ+ம்: அ + இலை = அவ்விலை
இ + எறும்பு = இவ்வெறும்பு
உ + அன்னம் = உவ்வன்னம்
2. அ, இ, உ எனும் சுட்டெழுத்தின் முன் யகரம் வரும் போது எவ்வாறு புணரும்?
நிலை மொழி ஈற்றில் அ, இ, உ எனும் சுட்டெழுத்துக்கள் வர வருமொழி முதலில் யகரம் வரின் “வ” கரம் தோன்றும்.
உ+ம்:
அ + யானை = அவ்யானை
இ + யானை = இவ்யானை
உ + யானை = உவ்யானை
3. எகர வினா, முச்சுட்டு நிலைமொழியில் வர வருமொழியில் உயிரும், யகரமும் வரின் யாது நிகழும்?
"வ" கரம் தோன்றும்
4.எகர வினா, முச்சுட்டு நிலை மொழியில் வர வருமொழியில் யகரம் தவிர்ந்த ஏனைய மெய்கள் வந்தால் யாது நிகழும்?
வரும் மெய்யெழுத்து மிகும்.
உ+ம்:
எ + கதிரை = எக்கதிரை (க் மிகுந்துள்ளது)
அ + சட்டி = அச்சட்டி (ச் மிகுந்துள்ளது)
இ + பானை = இப்பானை (ப் மிகுந்துள்ளது)
உ + குதிரை = உக்குதிரை (க் மிகுந்துள்ளது)
5.உயிர் ஈற்றின் முன் வல்லினம் (க், ச், த், ப்) வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலை மொழி ஈற்றில் உயிர் வர வருமொழி முதலில் வல்லெழுத்தாகிய க், ச், த், ப் என்பன வரின் வரும் க், ச், த், ப் எனும் வல்லினங்கள் மிகும்.
உ+ம்:-
கொக்கு + கண் = கொக்குக்கண்
கொக்கு + சிறகு = கொக்குச்சிறகு
கொக்கு + தலை = கொக்குத்தலை
6.புணர்ச்சியில் வல்லினம் மிகுவதற்கு ஏதுவான இடங்கள் சில காட்டுக?
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் மிகும்.
உ+ம் - தீ + பெட்டி = தீப்பெட்டி (இயல்பு ஈறு)
வட்டம் + கல் - வட்டக்கல் (விதி ஈறு)
உயர்திணைப் பெயர் முன் மிகும்.
உ+ம்- நம்பி + சென்றான் = நம்பிச் சென்றான்
ஆடி + களித்தாள் = ஆடிக்களித்தாள்
பொதுப்பெயர் முன் அவ்வழியில் மிகும்.
உ+ம்:- சாக்கி + பெண் = சாக்கிப்பெண்
அஃறிணைப் பெயர் முன் அவ்வழியில் மிகும்.
உ+ம் - வட்டம் + கை - வட்டக்கை
அஃறிணைப் பெயர் முன் வேற்றுமையில் மிகும்.
உ+ம்:- வண்டு + கால் - வண்டுக்கால்
தெரிநிலை வினையெச்சத்தின் முன் மிகும்.
உ+ம்: ஆடி + கொண்டான் = ஆடிக்கொண்டான்
குறிப்பு வினையெச்சத்தின் முன் மிகும்.
உ+ம்: கரியனின்றி + சென்றான் = கரியனின்றிச்சென்றான்
இனி எனும் சொல்லையடுத்து மிகும்.
உ+ம்:- இனி + பயமில்லை = இனிப்பயமில்லை
சில எண்ணுப் பெயர் முன் மிகும்.
உ+ம்:- எட்டு + தொகை = எட்டுத்தொகை
ஐகார ஈற்றுச் சொற்களை அடுத்து மிகும்.
உ+ம்:- பெண்ணை + கண்டார் = பெண்ணைக்கண்டார்
7.எல்லா உயிர் ஈற்றின் முன்னும் வரும் வல்லினங்கள் மிகுமா?
பெரும்பான்மையாக எல்லா உயிர் ஈற்றின் முன்னும் வரும் வல்லினங்கள் மிகும். சிறுபான்மையாக மிகாது விதிவிலக்காயும் வரும்.
உ+ம்:
ஏரி + கரை = ஏரிக்கரை
பழமுதிர் + சோலை = பழமுதிர்ச்சோலை
குழந்தை + கை = குழந்தைக்கை
8.உயிர் ஈற்றில் வரும் மரப்பெயர்கள் முன் வல்லினம் எவ்வாறு புணரும்?
உயிர் ஈற்றில் வரும் சில மரப்பெயர்கள் முன் வல்லினம் வரின் வரும் வல்லினம் மிகாது. அவ்வல்லினத்திற்கு இனமாகிய மெல்லின எழுத்தே வேற்றுமையில் சில இடங்களில் மிகும்.
உ+ம்:
மா + துளிர் = மாந்துளிர்
மா + சோலை = மாஞ்சோலை
காயா + பூ = காயாம்பூ
9.மெய் ஈற்றின் முன் உயிர் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
நிலை மொழி ஈற்று மெய் மேல் வருமொழி முதல் உயிர் வந்து சேர்ந்து உயிர்மெய்யாகிப் புணரும். அதாவது இயல்பு புணர்ச்சியாகப் புணரும்.
உ+ம்: புகழ் + இது = புகழிது
விரல் + எது = விரலெது
10.தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து நின்ற மெய்யின் முன் உயிர் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்?
தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து நின்ற மெய்யின் முன் உயிர் வரின் அந்த மெய் இரட்டிக்கும்.
உ+ம்: பொன் + ஒளி = பொன்னொளி
கல் + அறை = கல்லறை