புணர்ச்சிகளையும் அதன் தன்மை நிலைகளையும் அறிந்து கொள்ளல்-01
கீழேகொடுக்கப்படும் வினாவுக்கான விடையை சுருக்கமாக விவரித்தல்-01

1. புணர்ச்சி என்பது யாது?
நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் வேற்றுமைப் பொருளிலேனும், அல்வழிப்பொருளிலேனும் பொருந்தும் போது இயல்பாகவேனும் விகாரப்பட்டேனும் பொருந்துவது புணர்ச்சியாகும்.
2. பதங்கள் புணரும் புணர்ச்சியை எத்தனை வகைப்படுத்தலாம்?அவை எவை?
மூன்று வகைப்படுத்தலாம்.
அவையாவன:
உயிரீற்றுப்புணர்ச்சி
மெய்யீற்றுப்புணர்ச்சி
உருபுப்புணர்ச்சி
3. புணர்ச்சிக்கு இன்றியமையாத மொழிகள் எவை?
நிலைமொழி
வருமொழி
4.நிலைமொழி என்பது யாது? வருமொழி என்பது யாது?
சொற்கள் புணரும் போது நிலையாக உள்ள மொழி நிலை மொழி எனவும், நிலைமொழியுடன் வந்து சேரும் மொழி வருமொழியெனவும் அழைக்கப்படும்.
உ + ம் – கண் + மடல் = கண்மடல்
நிலைமொழி வருமொழி
5.நிலை மொழி இறுதி ஒலியின் அடிப்படையில் புணர்ச்சியை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை?
நான்கு வகைப்படுத்தலாம்.
அவையாவன:
உயிர் முன் உயிர் புணர்தல் உ+ம்: பலா + இலை = பலாவிலை
உயிர் முன் மெய் புணர்தல் உ+ம்: பலா + கனி = பலாக்கனி
மெய் முன் மெய் புணர்தல் உ+ம்: பால் + குடம் = பாற்குடம்
மெய் முன் உயிர் புணர்தல் உ+ம்: வான் + அகம் = வானகம்
6. சொற்றொடர் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?அவை எவை?
இரண்டு வகைப்படும்.
அவையாவன:
1) வேற்றுமைப் புணர்ச்சி
2) அல்வழிப் புணர்ச்சி
7. வேற்றுமைப் புணர்ச்சி என்பது யாது?
ஐ, ஆல், கு, இன், அது, கண் எனும் ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்படவேனும், மறைந்தேனும் வரப் பதங்கள் புணருதல் வேற்றுமைப் புணர்ச்சியாகும்.
உ+ம்:
வேற்றுமை உருபுகள் வெளிப்படுதல் வேற்றுமைஉருபுகள் வேற்றுமை உருபுகள் மறைந்திருத்தல்
புத்தகத்தை வாசித்தான் ஐ புத்தகம் வாசித்தான்
கல்லால் எறிந்தான் ஆல் கல்லெறிந்தான்
தசரதனுக்கு மகன் கு தசரதன்மகன்
மலையின் வீழருவி இன் மலைவீழருவி
கண்ணனது கை அது கண்ணன்கை
குன்றத்தின் கண் கூகை கண் குன்றக்கூகை
8.அல்வழிப் புணர்ச்சி என்பது யாது?
ஐ, ஆல், கு, இன், அது, கண் எனும் ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டேனும், மறைந்தேனும் வராதவாறு பதங்கள் புணருதல் (அதாவது வேற்றுமை அல்லாத வழியில் நிகழும் புணர்ச்சி) அல்வழிப்புணர்ச்சியாகும்.
உ+ம்:
கொல்யானை
9.அல்வழிப்புணர்ச்சியின் வகைகள் எத்தனை?
பதினான்கு
10.அல்வழிப்புணர்ச்சியுள் அடங்கும் தொடர்கள் எவை?
தொகைநிலைத் தொடர்கள்
தொகாநிலைத் தொடர்கள்